அமெரிக்காவிலிருந்து ட்ரோன்கள், குண்டுகள் விற்பனை.. ஈரானிய பெண் தொழிலதிபர் கைது!
சூடானுக்கு அனுப்பப்படவிருந்த ஈரானியத் தயாரிப்பு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பேரங்களுக்கு ஈரானிய பெண் தொழிலதிபரான ஷமீம் மாஃபி என்பவர் வழிவகுத்த காரணத்துக்காக, அவர் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானில் பிறந்த 44 வயதான பெண் தொழிலதிபரான ஷமீம் மாஃபி, அந்நாட்டுடன் தொடர்புடைய ஆயுத விற்பனை தொடர்புக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் இவர், சூடானுக்கு ட்ரோன்கள், குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை விற்பனை செய்ய கலிபோர்னியாவில் இருந்து இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். சூடானுக்கு அனுப்பப்படவிருந்த ஈரானியத் தயாரிப்பு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பேரங்களுக்கு ஷமீம் மாஃபி வழிவகுத்ததாகவும் இதிலிருந்து தப்பிக்க, அவர் ஓமனில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022 முதல் 2025 வரை, ஷமீம் மாஃபி ஈரானின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும், அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை அமைப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி ஆதரவையும் பெற்றதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தவிர, அவருடைய பரம்பரை சொத்துக்களை ஈரான் பறிமுதல் செய்ததாகவும், பின்னர் அந்தச் சொத்துகளை மீண்டும் பெறுவதற்காக அமெரிக்காவில் ஒரு தொழிலைத் தொடங்குமாறு அவருக்கு உத்தரவிட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது தற்போது அமெரிக்கத் தடைகள், சட்டங்களை மீறியது தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் ஷமீம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானின், அரசாங்கப் படைகளால் ஈரான் தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

