\
Iranian singer’s 74 lashes for performing without a hijab
Parastoo AhmadiANI

பாடகிக்கு 74 கசையடி.. ஈரான் அளித்த தண்டனை.. கிளம்பும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

பிரபல பாடகி ஒருவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், அந்தப் பாடகிக்கு 74 கசையடி தண்டனை விதித்திருக்கிறது ஈரான் நீதிமன்றம்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

பிரபல பாடகி ஒருவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், அந்தப் பாடகிக்கு 74 கசையடி தண்டனை விதித்திருக்கிறது ஈரான் நீதிமன்றம். எதற்காக அந்தப் பாடகிக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது? அப்படி அந்தப் பாடலில் என்ன இருக்கிறது? பார்க்கலாம்.

ஈரானின் பிரபல பாடகியாக இருப்பவர் பரஸ்தூ அஹ்மதி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில், தனது YouTube பக்கத்தில் ஒரு Online Concert-ஐ வெளியிட்டிருந்தார். பார்வையாளர்கள் இல்லாத இடத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், அவர் ஹிஜாப் அணியாமல் தனியாகப் பாடியிருந்தார். இந்த நிகழ்ச்சி ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. இதற்குக் காரணம், ஈரானில் பெண்களின் உடை மற்றும் பொதுவெளியில் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாகக் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வருவதுதான். குறிப்பாக, பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக உள்ள நிலையில், பெண்கள் தனியாகப் பாடுவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், பரஸ்தூ அஹ்மதி ஹிஜாப் அணியாமல் பாடிய இந்த நிகழ்ச்சி வெளியானதால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

HIJAB
HIJABREUTERS

இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்ற நிலையில், ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, பொது ஒழுக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கத்தை இணையத்தில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது இசைக்குழு, தயாரிப்புக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம், பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களுக்கு 74 கசையடி தண்டனையும், இரண்டு ஆண்டுகள் வெளிநாடு பயணம் செய்வதற்கும், இரண்டு ஆண்டுகள் கலைத்துறையில் செயல்படுவதற்கும் தடையும் விதிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தண்டனையை எதிர்த்து பரஸ்தூ அஹ்மதி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஈரானின் Qom நகர மேல்முறையீட்டு நீதிமன்றம், பரஸ்தூ அஹ்மதிக்கு விதிக்கப்பட்ட 74 கசையடி தண்டனையை உறுதி செய்துள்ளது. இதனால், இந்தத் தீர்ப்பு இறுதியானதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்ப்புக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஒரு கலை நிகழ்ச்சிக்காக கசையடி தண்டனை விதிப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், இந்தத் தண்டனை பெண்கள் மற்றும் கலைஞர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாக இருப்பதாகவும் உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

ஏற்கெனவே, ஈரானில் பெண்களுக்கான உடைக் கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றை அமல்படுத்தும் விதம் சர்வதேச அளவில் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், பரஸ்தூ அஹ்மதிக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை விவகாரம் மீண்டும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com