\
Iran Trains Women With Weapons
Iran womenReuters

3.1 கோடிப் பேர் ரெடி.. பெண்களுக்கும் ஆயுதப் பயிற்சி.. ஈரானின் அடுத்த அதிரடி!

அமெரிக்கா மோதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், 3.1 கோடி பொதுமக்களை போருக்குத் தயார்படுத்தும் வகையில், ஈரான் பெண்களையும் ஆயுதப் பயிற்சியில் களமிறங்கியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது பொதுமக்களை போருக்காக தயார்படுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவப் பயிற்சிகளில் பங்கேற்கும் காட்சிகள் வெளியாகியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரானின் உயரடுக்கு படையான IRGC சார்பில் தெஹ்ரானில் நடைபெற்ற பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலைகளில் செயல்படுவது, அடிப்படை ராணுவப் பணிகள் மற்றும் ஆயுதங்களைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

iran women
iran women reuters

இந்தப் பயிற்சிகளில் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். தெஹ்ரானில் உள்ள பயிற்சி மையத்தில் பெண்கள் வகுப்பறை பயிற்சிகளிலும் நடைமுறைப் பயிற்சிகளிலும் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆயுதங்களை அடையாளம் காண்பது, தடைகளைக் கடப்பது மற்றும் அடிப்படை ராணுவப் பணிகளை மேற்கொள்வது போன்ற திறன்கள் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டதாக அந்தக் காணொளிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்ற ஒரு பெண், ஈரான் தனது தாய்நாடு என்றும், நாட்டைப் பாதுகாப்பதில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால், ஆண்களுடன் இணைந்து போராட பெண்களும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஈரானின் பயிற்சியாளர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு மக்களின் தயார்நிலையும் மக்களின் சக்தியும் முக்கியமானது எனக் கூறியுள்ளனர். ஈரானின் ‘ஜன்ஃபிதார்’ (Janfidar) என்ற திட்டம், பொதுமக்களைப் போருக்கு தயார்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது முந்தைய மோதல்களின் அனுபவங்களின் பின்னணியில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் சுமார் 3.1 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இதில் பெண்கள் சுமார் 32 சதவீதம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்தவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் 46 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பிரசாரம் ராணுவப் பயிற்சியுடன், அவசர நேரத்தில் மக்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Abbas Araqchi
Abbas AraqchiReuters

இதற்கிடையே, அமெரிக்காவுடன் மோதல் ஏற்பட்டால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் போர் ஏற்பட்டால் அது மிகப்பெரிய அளவிலான போராக மாறக்கூடும் என்றும், அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கான கதவும் திறந்தே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Iran Trains Women With Weapons
தேர்தலில் தோற்றால் சிறையா?நெதன்யாகுவுக்கு நெருக்கடி.. ஈரான் தலையிடுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com