ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்: 14 பேர் பேலி
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து 5வது நாளாக நீடித்து வருகிறது.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் படிப்படியாக வலுவடைந்து வருவதால் நாட்டின் முக்கியமான பகுதிகளில் பதட்டமான நிலை உருவாகியுள்ளது. கடந்த 5 நாள்களில் போராட்டங்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்திருப்பதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி கூறியிருக்கிறது. இவர்களில் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர். போராட்டங்களை ஒடுக்குவதற்காக இதுவரை சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் ராணுவத் தளங்களையும், காவல் நிலையங்களையும் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் ஈரானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருப்பதாகவும், விலைவாசி உயர்ந்திருப்பதாகவும் கூறி மாஷாத் நகரங்கள் கடந்த 28ஆம் தேதி போராட்டத்தை தொடங்கியது. இது படிப்படியாக பிற நகங்களுக்கும் பரவியுள்ளது. இதற்கிடையே போராட்டங்களில் வன்முறை கூடாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி வலியுறுத்தியுள்ளார். போராட்டம் நடத்துவதற்கு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதாகக் கூறியுள்ள அவர், அந்த உரிமையைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.