அமெரிக்காவுக்கு பதிலடி.. இஸ்ரேலை சுற்றி வளைக்கும் ஈரான்!
செய்தியாளர் - M.மீரா
ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் மிக முக்கியமான தீவான கெஷ்ம் தீவு (Qeshm Island) மீது அமெரிக்க ராணுவம் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் வான்வழிச் சொத்துக்கள் மற்றும் ட்ரோன்களை நோக்கி ஈரான் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (Surface-to-air missiles) ஏவியதற்குப் பதிலடியாக, அமெரிக்க போர் விமானங்கள் தற்காப்பு நடவடிக்கையாக (Defensive strikes) இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலானது ஈரானுடன் ஒரு முழு அளவிலான போரை மீண்டும் தொடங்குவதற்காக அல்ல என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட ரகசிய நடவடிக்கை என்று அமெரிக்கா தெரிவித்ததாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்களின் வசம் உள்ள ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏமன், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள தங்களின் ஆதரவுக் குழுக்கள் (Proxies) மூலமாக இஸ்ரேல் மீது ஏவ ஈரான் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தனது பாதுகாப்புப் படையினரை அதி உயர் உஷார் நிலையில் (High Alert) வைத்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வகம் (INSS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஈரானிடம் தற்போது சுமார் 1,700 நவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளும் (Ballistic Missiles) மற்றும் 80,000 தற்கொலைப்படை ட்ரோன்களும் (Drones) இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 81,700 ஆயுதங்களின் பிரம்மாண்ட இருப்பே இஸ்ரேலை தற்போது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் எந்த நேரத்திலும் தங்களை நோக்கி இந்த ஆயுதங்களை ஏவக்கூடும் என்பதால் இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளான அயர்ன் டோம் (Iron Dome) மற்றும் ஆரோ (Arrow) ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானின் இந்த நேரடி மோதல் போக்கு, ஒட்டுமொத்த மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

