"நாங்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்" - ஈரான் அதிபர் உறுதி!!
அமெரிக்கா ஈரான் இடையேயான போர் கடந்த 6 மாதங்களைத் தாண்டியும் நீடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் வணிகம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதற்கிடையில் தான், இந்தியாவில் இன்று தொடங்கவுள்ள பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டிற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் இந்தியா வந்திருக்கிறார். தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் பெஷஷ்கியன் இடையே இருதரப்பு பேச்சு வார்த்தையும் நேற்று நடைபெற்றாது. தொடர்ந்து, டெல்லியில் இந்திய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்த்து ஈரான் தொடர்ந்து உறுதியுடன் நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களை ஆதிக்க சக்திகளாகக் காட்டிக் கொண்டு தங்களை மிரட்ட முற்படுவதாகவும், ஆனால் ஈரான் ஒருபோதும் அவர்களுக்கு முன்பாக மண்டியிடவோ அல்லது சரணடையவோ செய்யாது. தாங்கள் மனித உரிமைகளைக் காப்பதாகக் கூறிக்கொள்பவர்கள்தான் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே கணத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறார்களை கொன்ற உண்மையான பயங்கரவாதிகள் என்று அவர் சாடினார். மேலும், எந்தவித ஒடுக்குமுறையும் இன்றி அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும் சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு சமுதலத்தை உருவாக்குவதே தங்களது இலக்கு என்றார்.
ஈரானில் புரட்சி வெடித்தது முதல் தங்களை ஒடுக்கவும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் மற்றும் சகோதரர்கள் என்ற கொள்கையுடனும் நீதியுடனும் தாங்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம் என அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, தங்களது சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
