ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தை.. ”பாகிஸ்தான் பொருத்தமான நாடல்ல” - ஈரான் எம்பி காட்டம்!
பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியன் மூலம் மத்தியக் கிழக்கில் போர் மூண்டது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலகின் 20% சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை மூடியிருக்கிறது. இதனால், உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக ஈரான் அமெரிக்கா இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையே நேரடியான முதல்கட்ட பேச்சுவார்த்தை இந்த மாத தொடக்கத்தில் நடந்த நிலையில், எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானும், அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், ஈரான் ஹார்முஸ் பகுதியில் இருக்கும் அமெரிக்க முற்றுகையை நீக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில்தான், மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானின் திறன் குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஷ்டெஸ்தான் மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் ரெசாயி-இன் எக்ஸ் தளப்பதிவில், ”பாகிஸ்தான் ஒரு நல்ல நண்பனும் அண்டை நாடும் ஆகும். ஆனால், மத்தியஸ்தத்திற்கு தகுந்த ஒரு நாடு இல்லை. மேலும், பேச்சுவார்த்தைக்கு தகுந்த நம்பகத் தன்மையும் அதனிடம் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, பாகிஸ்தான் அமெரிக்காவுடன் அணிசேரும் போக்கை கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவின் நிலைபாடுகளை ஒருபோதும் எதிர்ப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் இதன்மூலம், பாகிஸ்தான் நடுநிலைமையுடன் செயல்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், "ஒரு மத்தியஸ்தர் நடுநிலையானவராக இருக்க வேண்டும், எப்போதும் ஒரு தரப்புக்குச் சார்பாக இருக்கக்கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் அமெரிக்கா இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், ஈரான் எம்.பி. ஒருவரின் இந்தக் கருத்து பேச்சுவார்த்தைக்கான சிக்கலை மேலும் அதிகரித்திருக்கிறது.

