”அமெரிக்கா ஒரு சாத்தான்; அதன் ஆதிக்கம் வெறும் பகல் கனவு” - மொஜ்தபா காமேனி
ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் ரத்தாகியிருக்கும் நிலையில், 2 நாடுகளும் பரஸ்பரம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றன. 8 வது இரவாக அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது இதில், 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து ஹார்முஸ் ஜலசந்தியின் சிரிக் அருகில் உள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தசூழலில் தான், மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆதிக்கம் குறித்து ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பெரிய சாத்தானான குற்றவாளி அமெரிக்காவுக்கு இப்போது ஒரு விஷயம் நன்றாகப் புரிந்துவிட்டது. இந்த பிராந்தியத்தில் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல், தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்த முடியும் என்று அது நினைப்பது ஒரு அப்பாவித்தனமான பகற்கனவு என்பதை அது தற்போது உணர்ந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, அமெரிக்காவின் இருப்பு மற்றும் அதிகார வரம்பிற்கு எதிராக ஈரான் தரப்பிலிருந்து வெளிவந்துள்ள இந்த கருத்து சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது.

