ஈரான் - இஸ்ரேல்
ஈரான் - இஸ்ரேல்முகநூல்

ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்; உடன் இணைந்த அமெரிக்கா!

இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Published on

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்குவோம் என அறிவித்திருப்பதால் மீண்டும் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் வான்பறப்பு முழுவதும் மழை போல் ஏவுகணைகள் பறந்து வந்தன. இந்த தாக்குதலுக்கு முன்பாக டெல் அவிவ் நகர் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 2 அடையாளம் தெரியாத நபர்களை இஸ்ரேல் காவல்துறை சுட்டுக்கொன்றது. இந்த நிகழ்வை தொடர்ந்து ஓரிரு நிமிடங்களில் இஸ்ரேல் வானை ஈரான் ஏவுகணைகள் ஆக்கிரமித்தன.

ஈரான் நாட்டில் இருந்து பறந்து வந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான அயன்டோம் அழித்தபோதும் ஒரு சில ஏவுகணைகள் இலக்குகளை தாக்கின. 200-க்கும் அதிகமான ஏவுகணைகள் அடுத்தடுத்து இஸ்ரேலை நோக்கி பறந்து வந்தன. ஹைபர்சோனிக் வகையான ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கிறது. இதனால், வானில் பட்டாசு வெடிப்பது போன்று ஏவுகணைகள் வெடித்து சிதறின. ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு இல்லை, ஒரு சில காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணை நிற்கும்

இந்த தாக்குதல் குறித்த தகவல்கள் தீயாக உலகம் முழுவதும் பரவிய உடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படையினரை களமிறங்க தயாராக இருக்கும்படி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தினர். இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி, இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்க மேற்கொள்ள உள்ளதாகவும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

ஈரான் உயரிய தலைவர் கமேனி

ஈரானின் உயரிய தலைவரான கமேனி,” இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தினால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். போரை எதிர்கொள்ளவும் அஞ்சமாட்டோம் . தேய்ந்துபோன யூத ஆட்சியில், இந்த அடி வலுவானதாக அதிக வலி தரும் படியாக இருக்கும் .” என இஸ்ரேலின் ஹிப்ரூ மொழியில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இப்படி மந்திரங்கள் ஒப்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும், தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை சற்று கவனியுங்கள் என இஸ்ரேல் பதிலளித்திருக்கிறது.

ஈரான் - இஸ்ரேல்
போர் சூழல் | இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்.. களத்தில் குதித்த அமெரிக்கா!

ஐ.நா. சபை

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. உடனடியாக அமைதி திரும்ப நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்துள்ளது.

ஈரான் பெரும் தவறை செய்து விட்டது!

இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரான் பெரும் தவறை செய்து விட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ஈரான் பெரிய தவறைச் செய்துவிட்டது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அதேநேரம் ஈரானின் ஏவுகனை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. உலகிலேயே சிறந்த வான் பாதுகாப்பு இஸ்ரேலிடம் உள்ளது. நாட்டை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்ற எனது உறுதியையும், எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான எனது உறுதியையும் ஈரானின் ஆட்சியாளர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. “ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளர்.

ஈரான் - இஸ்ரேல்
போர் சூழல் | இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்.. களத்தில் குதித்த அமெரிக்கா!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு ஆயுதப்படையான ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மூண்டது. தற்போது ஈரானின் இந்த தாக்குதல் பதற்றத்தை காட்டுத் தீ போல் பரவ செய்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com