கிரீன்லாந்தைப் பாதுகாக்க தயார்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.. அதிர்ச்சியில் அமெரிக்கா!
கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்கா முயற்சித்த நிலையில், ஈரான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, அந்நாட்டைப் பாதுகாக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க, ஈரானின் கருத்து முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க தயாராக இருப்பதாக அறிவித்தார். மேலும் கிரீன்லாந்தை எங்களுக்கு விற்க டென்மாா்க் முன்வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொள்வோம் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இதற்கு டென்மார்க் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் இந்தச் செயல் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளையே அதிர்ச்சியடையவைத்த நிலையில், கிரீன்லாந்து மீது அமெரிக்கா எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என 6 ஐரோப்பிய நாடுகள் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டன.
ஆனால் அதனைத் தாண்டி அமெரிக்காவைப் பெரியளவில் கண்டிக்கும் விதமாக ஐரோப்பிய நாடுகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இந்தச் சூழலில் ஈரானின் மத்திய காவல்துறைத் தலைவரான அகமது-ரெசா ராடன் (Ahmad-Reza Radan) ஐரோப்பிய நாடுகளை விமர்சித்து, ’உங்களால் உங்கள் சொந்த நிலமான கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள். நாங்கள் வந்து அதைப் பாதுகாப்போம்’ என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளைக் கிண்டல் செய்யும் விதமாகவே அவர் இந்த கருத்தைக் கூறினார் என்றாலும், அவரின் இந்தப் பேச்சு ஐரோப்பிய ஊடகங்களில் முக்கியச் செய்திகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. ஈரானில், அமெரிக்கா இஸ்ரேலோடு இணைந்து பல்வேறு தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், அமெரிக்காவுக்கு அடிபணியாமல் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த சூழலில், தங்கள் நட்பு நாட்டுக்குச் சொந்தமான பகுதியை ஆக்கிரமிப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியபோதும், அதற்கு ஐரோப்பிய நாடுகள் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது தற்போது முக்கிய விவாதமாகியுள்ளது.

