அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட்: அதிர்ச்சி கொடுத்த ஈரான் !
ஈரான் உளவுப்பிரிவுத் தலைவர் காஸிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கைது வாரண்ட்டை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி, ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்படும் படைப் பிரிவின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட குவாசிம் சுலைமானி, ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்படுபவர். அரசுக்கு மிக நெருக்கமானவர். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து, அவருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஈரான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, ட்ரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க, ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஈரான் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம், ட்ரம்ப்பை தவிர, வேறு யாருக்கு எதிராக எல்லாம் பிடிவாரண்ட் உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ட்ரம்ப்பின் அதிபர் பதவிக் காலம் முடிந்த பிறகும் இந்த வழக்கில் அவர் மீதான விசாரணை தொடரும் என்பதை மட்டும் ஈரான் அரசு தரப்பு வழக்கறிஞர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், ட்ரம்புக்கு எதிராக, ஈரான் அரசு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ட்ரம்புக்கு எதிராக ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, இன்டர்போல் அமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒரு நபருக்கு எதிராக ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அவர் சர்வதேச பயணம் மேற்கொள்ள முடியாதபடி, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.