\
Iran Firm No Nuclear Materials Will Leave the Country
america vs ironani

முடியவே முடியாது.. அமெரிக்காவை ஆடவிட்ட ஈரான்.. மீண்டும் பதற்றத்தில் மத்திய கிழக்கு!

எங்களிடம் உள்ளதை நாட்டைவிட்டு வெளியே கொண்டுசெல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக, ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தங்களது அணுசக்தித் திட்டம் அமைதியான பயன்பாட்டிற்கானது என்றும், அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் நோக்கம் இல்லை என்றும் ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில், ஈரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு முன்பாக, ஈரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 440.9 கிலோ யுரேனியம் இருந்ததாக சர்வதேச அணுசக்தி முகமையான IAEA மதிப்பிட்டிருந்தது. அந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த யுரேனியத்தில் எவ்வளவு எஞ்சியிருக்கிறது என்பது தற்போது வரை தெரியவில்லை.

Mohsen Rezaei
Mohsen Rezaeireuters

இந்த விவகாரத்தில், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கியக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாயி அளித்த பேட்டியில் ஈரானின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருட்களில் ஒரு துகளைக்கூட நாட்டைவிட்டு வெளியே கொண்டுசெல்ல அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அணுசக்தியில் இயங்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கு இந்தச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஷ்யாவிடமும் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தினால், அதற்குப் பதிலடியாகத் தொலைதூரத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ரெசாயி எச்சரித்துள்ளார்.

Iran - America War
Iran - America War AI

இதற்கிடையே, ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி விவகாரம் முக்கிய இடம்பெற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில், ஈரானோ தனது அணுசக்திப் பொருட்களை ஒப்படைக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் முழுமையாக முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.