F35
F35 file photo

அசராமல் அடிக்கும் ஈரான்.. மீண்டும் ஒரு சக்திவாய்ந்த அமெரிக்க விமானம் சேதம்!

அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த F-35 சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Published on
Summary

அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதையடுத்து தீவிரமடைந்த போரின் ஐந்தாவது வாரத்தில், ஈரான் வான்வெளியில் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.

பிப்​ர​வரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்ரேலும் இணைந்து தாக்​குதலைத் தொடங்​கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் ஐந்தாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதனால், சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய ஈரானின் வான்பரப்பில் அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை தனது ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியதாக, மெஹர் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அந்த விமானம் லேக்கன்ஹீத் படைப்பிரிவைச் சேர்ந்தது என்றும் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியுள்ளது. இன்னமும் இந்த கூற்றுகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையில், ஈரான் இஸ்ரேலை நோக்கியும் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

முன்னதாக,மார்ச் 19ஆம் தேதி ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, எஃப்-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியதாகவும் விமானி பாதுகாப்பாக உள்ளார் என்றும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மார்ச் 2 அன்று, குவைத்தின் மீது 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி'க்கு ஆதரவாகப் பறந்துகொண்டிருந்த மூன்று அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள்ஸ் விமானங்கள், தங்கள் படையினரின் தவறு காரணமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டதை சென்ட்காம் (CENTCOM) உறுதி செய்திருந்தது.

ஈரானிய இராணுவம் அமெரிக்காவின் F-35 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய சம்பவம் ஒரு 'பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. காரணம், F-35 ரக போர் விமானம் உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகவும், அமெரிக்காவின் வான் சக்தியின் ஒரு முக்கிய தூணாகவும் பரவலாகக் கருதப்படுகிறது

F-35 திட்டத்திற்கு இதுவரை சுமார் 450 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் (US Government Accountability Office) அறிக்கையின்படி, இந்தப் போர் விமானத் திட்டம் அதிகரித்து வரும் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பத்தாண்டுகளில் இதன் மொத்த வாழ்நாள் செலவுகள் $2 டிரில்லியனைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

F-35 போர் விமானம், அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. ரேடார் மற்றும் பிற கண்காணிப்புகளில் இருந்து தப்பித்துச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறைந்திருந்து தாக்கும் திறன்களுடன் வடிவமைக்கப்பட்ட இதன் மீது ஒரு வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டால், எதிரிகள் இதுபோன்ற விமானங்களைக் கண்டறியும் அல்லது கண்காணிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்கிறார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com