ஈரான்: ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு வங்கி சேவை வழங்கிய மேனேஜரின் சீட் கிழிப்பு!

ஈரான்: ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு வங்கி சேவை வழங்கிய மேனேஜரின் சீட் கிழிப்பு!
ஈரான்: ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு வங்கி சேவை வழங்கிய மேனேஜரின் சீட் கிழிப்பு!

ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் நாட்டில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், முகத்தை மறைக்காமல் வந்த பெண்ணுக்கு வங்கி சேவையை வழங்கியதற்காக அந்த வங்கியின் மேனேஜரை பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈரான் நாட்டில் சுமார் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில், அங்குள்ள பெண்கள் தங்களது தலை, கழுத்து மற்றும் தலை முடியை மறைக்க வேண்டும் என அந்நாட்டின் அறநெறி காவல்துறையால் சட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் கட்டாயம் தலையை மறைக்க வேண்டும் என்ற ஈரானின் சட்டத்தை எதிர்த்து மஹ்சா அமினி என்ற பெண் போராடியதை அடுத்து அவரை கைது செய்தது ஈரான் போலீஸ். பின்னர் காவல்துறையில் கட்டுப்பாட்டில் இருந்த அமினி இறந்ததால் ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் இன்னும் வீரியமடைந்தது.

இதனால் ஈரான் நாட்டில் பொதுவெளியில் ஹிஜாபை தூக்கி எறிந்து பெண்கள் ஆண்கள் உட்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈரானிய அதிகாரிகளின் அடக்குமுறையால் 16,800 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இளைஞர்கள் உட்பட 400 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை நடவடிக்கைகள் கூறியிருக்கின்றன.

இப்படி இருக்கையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் மாகாணத்தில் உள்ள வங்கிக்கு கடந்த வியாழனன்று ஹிஜாப் அணியாமல் வந்த பெண் ஒருவருக்கு வங்கி சேவையை வழங்கியதற்காக அதன் மேலாளரை கவர்னரின் உத்தரவின்படி பணியில் இருந்து நீக்குவதாக துணைநிலை ஆளுநர் அஹ்மத் ஹாஜிசாதே அறிவித்ததாக மெஹர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆகையால் ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்துவது அத்தகைய வங்கி மேலாளர்களின் பொறுப்பு என ஹாஜிசாதே கூறியதாகவும் மெஹர் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக, 1979 புரட்சிக்கு பிறகு, அமெரிக்க ஆதரவு முடியாட்சியை விடுத்து இஸ்லாமிய குடியரசை நிறுவிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. பின்னாளில், மாறிய ஆடை விதிமுறைகளால் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் தளர்வான, வண்ணமயமான முக்காடு அணிந்த பெண்களைப் பார்ப்பது சகஜமாகிவிட்டது.

இந்த நிலையில், தீவிர பழமைவாதத்தை கடைப்பிடிக்கும் ஈரானின் அதிபரான இப்ராஹிம் ரைசி "அனைத்து அரசு நிறுவனங்களும் தலையில் முக்காடு போடும் ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்த" அணிதிரட்ட வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், பல பெண்கள் தொடர்ந்து இந்த விதிகளை மீறியே வருவதாக சர்வதேச ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com