அமெரிக்காவின் கூட்டாளி மீது தாக்குதல்.. துணிந்த ஈரான்.. அடுத்த குறி யாருக்கு?
செய்தியாளர் - M.மீரா
ஈரான் மீது புதிதாக ராணுவத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறியிருந்த நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான ஓமனின் தீவு ஒன்றில் கப்பல் வழிகாட்டி அமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமைந்துள்ள ஓமனின் டிட்மார் தீவில் (Didmar Island) நவம்பர் 10ஆம் தேதி ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, ஓமனின் வழிகாட்டி அமைப்புகளை அழித்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை மூன்று தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து தீவில் இருந்து புகை எழும் காட்சிகளும் செயற்கைக்கோள் படங்களில் வெப்ப மாற்றங்களும் பதிவாகியுள்ளன. எனினும், எந்த அளவுக்குச் சேதம் ஏற்பட்டது, வழிகாட்டி அமைப்புகள் அழிக்கப்பட்டனவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மாற்று வழிகாட்டி அமைப்புகள் இருப்பதால் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பை வலுப்படுத்தி வருகின்றன. குவைத்தில் புதிய ராணுவக் கட்டளைத் தலைமையகத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஈரானின் நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், உலக எண்ணெய் வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

