கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான பெண்கள் போராட்டத்துக்கு இறுதியில் பணிந்தது ஈரான் அரசு!
ஈரானில் பெண்கள் கட்டாயம் தலை, கழுத்து மற்றும் தலை முடியை மறைக்கும் வகையிலான ஹிஜாப் ஆடையை அணிய வேண்டும் என சட்டத்தை அந்நாட்டின் அறநெறி காவல்துறை கண்டிப்புடன் செயல்படுத்தியது. இதனை எதிர்த்து மஹ்சா அமினி என்ற இளம்பெண் போராடியதால் அவர் கைது செய்த சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது ஈரான் போலீசார் தாக்கியதில் இளம்பெண் அமினி கடுமையாக பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஈரானில் பெண்கள், ஆண்கள் என பலரும் கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் இறங்கினார்கள்.
போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி, துப்பாக்கிச் சூடு போன்றவை நடத்தியும் அடக்குமுறையை பிரயோகித்தது. இதனால் 16,800 பேர் கைது செய்யப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை நடவடிக்கைகள் கூறியிருக்கின்றன.
ஈரான் அரசின் இந்த அடக்குமுறைக்கு உலக நாடுகளில் இருந்து பல எதிர்ப்புகளும் கிளம்பியிருந்ததோடு, ஈரான் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவுகள் பெருகி வந்தன. சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்த போராட்டத்துக்கு, தற்போது ஈரான் அரசு முதல் முறையாக பணிந்துள்ளது.
அதன்படி, பொது வெளியில் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்தும் அறநெறி காவல்துறை பிரிவை ஈரான் அரசு கலைத்திருக்கிறது. ஆனால் அவை நிரந்தரமாக கலைக்கப்பட்டதா இல்லை தற்காலிகமானதா என ஈரான் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை.