தாக்குதலில் ராணுவ தளபதியை பறிகொடுத்த ஈரான்.. தொடரும் அமெரிக்கா -ஈரான் மோதல்..!

தாக்குதலில் ராணுவ தளபதியை பறிகொடுத்த ஈரான்.. தொடரும் அமெரிக்கா -ஈரான் மோதல்..!
தாக்குதலில் ராணுவ தளபதியை பறிகொடுத்த ஈரான்.. தொடரும் அமெரிக்கா -ஈரான் மோதல்..!

ஈராக்கின் பாக்தா‌த் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குத‌லில், ‌ஈ‌‌‌ரா‌ன் உயர்மட்ட ராணுவ தளபதி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதலே ஈரானுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். 2018-ஆம் ஆண்டு ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனைத்தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார் ட்ரம்ப். பொருளாதார நெருக்கடி கொடுத்து ஈரானை தனிமைப்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடித்தன. இந்த நிலையில் செவ்வாயன்று ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்து பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டு போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.

ஈரான் ஆதரவு கொண்ட ஈராக் படையினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் கோபமடைந்த ட்ரம்ப் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இந்த சூழலில் ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் படையினரின் கார்கள் பாக்தாத் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட போது அமெரிக்கப் படைகள் அவற்றின் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி , ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்படும் படை பிரிவின் துணை தலைவர் அ‌பு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உளவுப்படைப்பிரிவின் தலைவர் குவாசிம் சுலைமானி , ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்படுபவர். அரசுக்கு மிக நெருக்கமானவர். தற்போது முக்கிய தளபதியை பறிகொடுத்துள்ள ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளது. அமெரிக்காவின் செயல் முட்டாள்தனமானது என்று கூறியுள்ள ஈரான் அரசு, இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனிடையே அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே குவாசிம் சுலைமானியை கொன்றதாக அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகன் விளக்கியுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை குவாசிம் சுலைமானி தான் திட்டமிட்டார் என்றும் பல அமெரிக்கர்கள் உயிரிழப்புக்கு இவர் காரணமாக இருந்துள்ளார் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை கொல்ல அவர் திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ள பென்டகன் ஈரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கில் குவாசிம் சுலைமானியைக் கொன்றதாக விளக்கமளித்துள்ளது. வெளிநாட்டில் உள்ள அமெரிக்கர்களை காக்க இது போன்ற நடவடிக்கை அவசியம் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் செயலுக்கு ஈரானின் பதிலடி தீவிரமாக இருக்கும் என்பதால் அமெரிக்கா ஈரான் இடையே உருவாகியுள்ள பதற்றம் நிச்சயம் சர்வதேச அளவில் எதிரொலிக்கும். குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட செய்தி வெளியான உடனே உலகளவில் எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com