இன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக கிம் ஜாங் யாங் தேர்வு
இன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக, தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங் யாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்டர்போல் என்பது (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது 192 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான்ஸில் அமைந்துள்ளது.
இதன் தலைவராக சீனாவைச் சேர்ந்த மெங்க் ஹாங்வே என்பவர் இருந்தார். சமீபத்தில் இவர் சீனாவுக்கு சென்ற போது லஞ்ச ஊழல் புகார் தொடர்பாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால், இன்டர்போல் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இன்டர்போல் அமைப்பின் சிறப்புக் கூட்டம் சமீபத்தில் துபாயில் நடந்தது. அப்போது தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங் யாங், இன்டர்போல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று தேர்வானார்.
(அலெக்சாண்டர் புரோகோசக்)
இவரை எதிர்த்து போட்டியிட்ட ரஷ்யாவைச் சேர்ந்த இன்டர்போல் துணைத் தலைவர் அலெக்சாண்டர் புரோகோசக் தோல்வி அடைந்தார். இவர், தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டால் ரஷ்யாவுக்கு எதிராக உள்ள நாடுகளின் மீது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார் என்று கருத்தப்பட்டது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிம் ஜாங் யாங், 2020 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார்.