அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்வீட் பதிவுகளைக் கொண்ட காலணிகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் அந்தக் காலணிகள் ட்ரம்ப்பைப் பெருமைப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை. மாறாக ட்ரம்ப்பைக் கிண்டல் செய்யும் விதமாக அவரது ட்வீட் பதிவுகளை அச்சிட்டு காலணிகளை வெளியிட்டு வருகிறது அந்தக் காலணி நிறுவனம்.
ட்ரம்ப் தனது கருத்தைத் தானே முரண்படும் விதமாக இருவேறு விதமாக ட்வீட் செய்து அதனால் அடிக்கடி விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். உதாரணமாக அமெரிக்காவின் வாக்காளர் குழு (Electoral college) பற்றி 2012 ஆம் ஆண்டு ட்ரம்ப் தனது ட்விட்டரில், வாக்காளர் குழு ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு விசயம் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு, வாக்காளர் குழு என்பது மிகச்சிறந்த, புத்திசாலித்தனமான ஒன்று. இதன் மூலம் நாட்டின் ஒரு சிறிய பகுதி முதல் பெரிய மாகாணம் வரை தேர்தலில் பங்கெடுக்க முடிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இதுபோன்ற முரண்பட்ட கருத்துக்கள் அச்சடிக்கப்பட்ட காலணிகளைத்தான் அந்தக் காலணி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த காலணிகளின் மேல் பட்டைகளில், வலது காலணியின் பட்டையில் ஒரு கருத்தும், இடது காலணியின் பட்டையில் எதிர் கருத்தும் இருக்கும்படி அச்சிடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று விதமான கருத்துகளை கொண்ட காலணிகள் விற்பனைக்கு வந்துள்ளன.