9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்

9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்

உலகின் மிகப்பெரிய குகையாக கருதப்படும் ஹாங் சன் டூங் என்ற குகை வியட்நாமின் ட்ராக் குவாங் பிங்கில் அமைந்துள்ளது. 150 தனித்தனி குகைகளின் தொடராக உள்ள இந்த பிரமாண்டமான குகை, 9 கிலோமீட்டர் நீளமும், 200 மீட்டர் உயரமும், 150 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அதிசய குகையின் உள்ளே காடுகள், புல்வெளிகள், ஆறுகள், மணற்பரப்பு, காட்டுயிர்கள், திறந்தவெளியில் மேகங்கள் என அனைத்தும் உள்ளன. 

வியட்நாம் நாட்டின் மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்துள்ள இந்த சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை குகை, ஹோ ஹான்க் என்பவரால் 1991 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த குகை, 2013 ஆம் ஆண்டில் முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

வனத்தின் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் 250-300 பேர் மட்டுமே இங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 2009ம் ஆண்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த குகைக்கு, ஒவ்வொரு ஆண்டும், சுற்றுலாப் பயணிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு இந்த குகைக்குள் சென்று மீண்டும் திரும்பி வருகிறார்கள்.

போங் நா-கே பாங் தேசியப் பூங்காவின் இதயமாக இக்குகைகள் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால், இந்தக் குகை உருவானதாகக் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே இக்குகையை மழை ஆறு என்று பொருள்படும் ‘சான் டூங்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

குகையின் உடைந்த மேற்கூரை வழியாக வெளியே பார்த்தால் காடுகள் அடர்ந்த சோலைவனம் போலக் காட்சியளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இங்குள்ள மணல் துகள்களின் மீது படிந்த தண்ணீர் துளிகளால், இந்தக் குகை முழுவதும் பல அழகிய படிமானங்கள் உருவாகியிருக்கின்றன.

இந்த குகையில் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வசிக்கின்றன. இக்குகை 40 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டுமளவிற்கு வானளாவிய உயரம் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  

இக்குகை அமைந்துள்ள ட்ராக் குவாங் பிங் பகுதிவாசிகளே குகை வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு ஹாங் சன் டூங் குகை ஒன்றே  வாழ்வாதாரமாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com