இஸ்ரேலில் உள்ள 20,000 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - மத்திய அரசு தகவல்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது குறித்த விரிவான தகவல்

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடரும் நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளூர் நிர்வாகம் அறிவிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவரவர் தங்கியுள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக தங்கியிருக்க இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் மருத்துவத்துறை, ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வைரம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்திய மாணவர்கள் பலர் இஸ்ரேலில் உயர் கல்வி பயின்று வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் நபர்கள் இஸ்ரேல் குடிமக்களாக உள்ளனர். சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேல் நாட்டு மக்கள் "பாம் ஷெல்டர்" என அழைக்கப்படும் தரைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு அறைகளில் பத்திரமாக தங்கும்படி அந்த நாட்டு அரசு அறிவுரை அளித்தது. அபாய சங்கு ஒலித்ததுமே மக்கள் பதுங்கு குழிகளுக்கு சென்றனர். இஸ்ரேல் ராணுவம் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இஸ்ரேல் குடிமக்களைப் போலவே அங்கு தங்கி உள்ள இந்திய குடிமக்களும் தங்களுடைய இல்லங்கள் மற்றும் தங்கும் இடங்களுக்கு திரும்பி விட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை யாருக்கும் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டதாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எந்த தகவலும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கள நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வெளியுறவு துறை அமைச்சகமும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை கவனித்து வருகிறது.

ஒருவேளை போர் மேலும் தீவிரமடைந்தால் இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வருவதற்கான திட்டங்களை தயாராகி வருகின்றனர். தேவைப்பட்டால் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் இஸ்ரேல் அரசின் உதவியுடன் அங்குள்ள இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். டெல் அவிவ் விமான நிலையம் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிறிய விமானத்தளங்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மீட்புப் பணிகளை நடத்துவதில் சிக்கல் ஏதும் இருக்காது எனவும் அதிகாரிகள் கருதுகின்றனர்.

- கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com