இந்தோனேசியா | பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!
ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வந்து கல்வியறிவைப் பெருக்க வகை செய்யும் வகையில், இந்தியாவிலேயே (சுதந்திர) முதல்முறையாக தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் இதை அப்போதைய முதல்வராக இருந்த காமராஜரால் செயல்படுத்தப்பட்டது. பின்னர் இது நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலும் பின்னர் வந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு சத்துணவு திட்டமாக மாறி இன்றுவரை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதுகூட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்து மாநில குழந்தைகளின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இப்படி, தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம், இன்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இந்த திட்டம் வெளிநாட்டிலும் தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவிலும் இந்தத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியாவும் இருக்கிறது. இந்த நிலையில்தான் அந்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இத்திட்டம் குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபுவோ சுபியான்தோ, ”இந்தோனேஷியாவில் உள்ள 3 குழந்தைகளில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார். இதனை களைய ஊட்டச்சத்து நிறைந்த இலவச மதிய உணவு 8.3 கோடி குழந்தைகளுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவருடைய இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக சோதனை அடிப்படையில் மேற்கு ஜாவாவில் இருக்கும் சுகவிலில் உள்ள 20 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது சோறு, வறுத்த காய்கறிகள், வேகவைத்த முட்டை, பால் மற்றும் பழங்கள் என ஒவ்வொரு நாளும் 3,200 பேருக்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 17 ஆயிரம் தீவுகள் இணைந்த ஒரு நாட்டில் 8.3 கோடி குழந்தைகளுக்கு நாள்தோறும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது. இதேபோல், கர்ப்பிணிகளுக்கும் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், இந்த திட்டத்தால் நாட்டின் நிதி நிலைமை மோசமடையும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். என்றாலும், சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.