\
indonesia earthquake strikes
indonesia earthquakereuters

7.7 ரிக்டர் அளவுகோல்.. இரண்டு நிலநடுக்கங்களைச் சந்தித்த இந்தோனேசியா.. 38 பேர் பலி!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இது, 158 கி.மீ (98 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
Published on

இந்தோனேசியாவின் 'புளோரஸ்' (Flores) தீவுப் பகுதியில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல கட்டடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

உலகில் அதிகம் நிலநடுக்கத்தைச் சந்திக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ’நெருப்பு வளையம்’ (Ring of Fire) எனப்படும் மிகவும் ஆபத்தான புவித்தட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால், இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுகின்றன. அதன்படி, ஆஸ்திரேலியத் தட்டுக்கும் சுண்டாத் தட்டுக்கும் இடையிலான, மிகவும் சிக்கலான பகுதியான கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் அருகே இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நேரப்படி அதிகாலை 5:58 மணிக்கு 'கிழக்கு நுசா தெங்காரா' மாகாணத்தின் எண்டே நகருக்கு வடமேற்கே 68 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடுபாடுகளில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்திருப்பதாகவும், நிலநடுக்கம் காரணமாக 2,000 பேர் அப்பகுதிகளில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல கட்டடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்திற்குப் பிறகு. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இது, 158 கி.மீ (98 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

indonesia earthquake strikes
இந்தோனேசியா | மருமகனை வங்கி குழுவில் நியமித்த அதிபர்.. வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த நாணயம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com