லண்டனில் லாரியும், சிற்றுந்தும் மோதி விபத்து; 8 பேர் உயிரிழப்பு
லண்டனில் நேரிட்ட சாலை விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே பக்கிங் ஹாம்ப்ஷயர் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரியும், சிற்றுந்தும் எதிர்ப்பாராத விதமாக மோதிக் கொண்டன. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், வாகனங்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய நால்வர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர்கள் இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.