அமெரிக்கா |கோமா நிலையில் இந்திய மாணவி.. அவசர விசாவுக்கு பெற்றோர் வேண்டுகோள்!
மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. 35 வயதான இவர், நான்காண்டுகளாக அமெரிக்காவில் தங்கிப் படித்து வருகிறார். தற்போது இறுதியாண்டு படித்து வரும் நீலம் ஷிண்டே, கடந்த 14ஆம் தேதி விபத்தில் சிக்கினார். அதிவேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் தலையில் பலத்த காயமடைந்ததால் நீலம் ஷிண்டே கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இதுபற்றி மராட்டிய மாநிலத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக விசா பெற்று அமெரிக்காவுக்குச் சென்று மகளை பார்க்க முடிவு செய்தனர். இதற்காக அவசர விசா கேட்டு அவரது தந்தை விண்ணப்பித்துள்ளார். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஆவதால் செய்வதறியாது தவிக்கிறார். அவசர விசா கிடைப்பதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இத்தகவல் குறித்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுப்ரியா சுலேவும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை டேக் செய்து கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ”இது ஒரு கவலையளிக்கும் பிரச்னை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதைத் தீர்க்க உதவ வேண்டும். நான் அந்தக் குடும்பத்தினருக்கு இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறேன். ஜெய்சங்கருடன் தனக்கு அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள் பிரச்னை என வரும்போது அவர் நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார். வெளியுறவு அமைச்சகம், எப்போதும் உதவ கூடுதல் முயற்சி எடுப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், விசா உள்ளிட்டவற்றிலும் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.