ஜெர்மனியில் பிச்சையெடுத்த இந்திய நீச்சல் வீராங்கனை
ஜெர்மனியில் நடைபெற்ற பாராநீச்சல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை காஞ்சன்மாலா பாண்டே, போட்டியில் கலந்துகொள்வதற்கான பணம் இல்லாததால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த காஞ்சன்மாலா பாண்டே, கடல் அலைகளுக்கு எதிராக நீச்சல் அடிப்பதில் வல்லவராக அறியப்பட்டவர். சிறுவயது முதலே இரு கண்களிலும் பார்வையை இழந்த காஞ்சன்மாலா, நீச்சல் போட்டிகளில் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் கொண்டவர். ஜெர்மனியில் கடந்த 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள காஞ்சன்மாலா உள்பட இந்தியாவில் இருந்து 5 பேர் தகுதி பெற்றனர். இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்ற அவர்களுக்கு இந்திய பாராலிம்பிக் கமிட்டி ஒதுக்கிய நிதி சரியான சமயத்தில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பெர்லின் சென்ற பின்னர் கையில் போதிய பணமில்லாமல் தவித்த காஞ்சன்மாலா, அந்நகரில் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும் மனம்தளராத காஞ்சன்மாலா, அந்நகரில் இருந்த நல்உள்ளங்கள் உதவியுடன் போட்டியில் கலந்துகொண்டார். இந்தநிலையிலும் போட்டியில் கலந்துகொண்ட காஞ்சன்மாலா மற்றும் சுயேஷ் யாதவ் ஆகிய 2 பேரும் வெள்ளிப்பதக்கங்கள் வென்று, உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனர். இந்த செய்திகுறித்து கேள்விப்பட்ட ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.