இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் ஜாகிங் சென்றபோது கொலை
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள பிளோனோ நகரில் வசித்து வந்த 43 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த சர்மிஸ்தா சென் என்ற பெண், கடந்த சனிக்கிழமை அன்று காலை ஜாகிங் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அவரது உடல் பிளோனோ நகரில் உள்ள மார்ச்மேன் வே அருகே உள்ள சிற்றோடை பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர் கொல்லப்பட்ட காரணத்தை கண்டறிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை நடந்த அதே நேரத்தில் அங்கிருந்த வீட்டிற்குள் யாரோ ஒருவர் நுழைந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். அது தொடர்பான கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதற்காக 29 வயதான பக்காரி அபியோனா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினந்தோறும் அதிகாலை நேரங்களில் சர்மிஸ்தா சென் ஜாகிங் செய்வது வழக்கம் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சர்மிஸ்தா சென் கொல்லப்பட்ட மறுநாள் அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பூக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ரன்னிங் ஷூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.