மீண்டுமொரு இந்தியர் சுட்டுக் கொலை.. அமெரிக்காவில் தொடர்கதையாகும் மரணங்கள்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் உயிரிழப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மேலும் ஓர் உயிரிழப்பு சமீபத்தில் அரங்கேறி உள்ளது.
model image
model imagefreepik

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் ராவ்ஜிபாய் பட்டேல் என்பவர் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஷெபீல்ட் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்திவந்தார். இவர், சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம், வில்லியம் ஜெர்மி மூர் என்பவர், தங்குவதற்கு அறை தேடி பிரவீன் பட்டேலின் ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் வில்லியம் ஜெர்மி, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து பிரவீன் பட்டேல் மீது இரண்டு முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரவீன் பட்டேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

model image
model imagefreepik

இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஷெபீல்ட் போலீசார், தப்பியோடிய வில்லியம் ஜெர்மியை கைதுசெய்தனர். இந்த கொலைச் சம்பவத்திற்கு அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் (AAHOA) கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், பிரவீனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும் அது, ’பிரவீனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க அலபாமா அதிகாரிகள் உதவுவார்கள்’ என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே இந்திய - அமெரிக்கர்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் நீல் ஆசாரியா, ஷ்ரேயாஸ் ரெட்டி பினிகர், விவேக் சைனி ஆகியோர் மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

விவேக் தனஜா
விவேக் தனஜா

அவரைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் தனேஜா என்பவர் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்தார். இப்படி, இந்த ஆண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள். கடந்த 45 நாட்களில் 4 மரணங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த 13ஆம் தேதி கலிபோர்னியாவில் கேரளாவைச் சேர்ந்த குழந்தைகளுடன் பெற்றோரும் சடலமாகக் கிடந்தனர். தற்போது மேலும் ஓர் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com