கொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொலை செய்து விட்டு சடலத்துடன் சென்று காவல் நிலையத்தில் சரண்டைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சங்கர் ஹங்கூட்(53). இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அங்கு தொழில்நுட்ப துறையில் பணிப்புரிந்து வருகிறார். சங்கர் ஹங்கூட் கடந்த திங்கட்கிழமை கலிஃபோர்னியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு கொலை செய்துவிட்டு சடலத்துடன் வந்து சரண் அடைந்துள்ளார். அத்துடன் அவர் மேலும் 3 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “ஹங்கூட் காவல்நிலையத்திற்குள் திடீரென வந்தார். உள்ளே வந்தவுடன் அவர் ஒரு கொலை குறித்து வாக்குமூலம் கொடுக்கவேண்டும் எனக் கூறினார். அத்துடன் அவர் ஒரு சடலத்தை தன்னுடம் எடுத்து வந்துள்ளதாகவும், மற்ற மூன்று சடலத்தை அவருடைய அடுக்கு மாடி குடியிருப்பில் வைத்துள்ளதாகவும் ஒப்புகொண்டார். என்னுடைய பதவிக் காலத்தில் இப்படி ஒரு நபர் கொலை செய்துவிட்டு சடலத்துடன் வந்து சரண் அடைந்ததை நான் பார்த்தது இல்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ரோஸ்வில்லே பகுதியிலுள்ள அவரது அடுக்கு மாடி குடியிருப்பில் மற்ற மூன்று சடலத்தை கண்டு பிடித்தனர். அத்துடன் அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த நபர் அவரது குடும்பத்தினரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.