அமெரிக்க விமான விபத்து: இந்திய வம்சாவளி டாக்டர் குடும்பத்துடன் பலி!
அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் தனது குடும்பத்துடன் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மருத்துவராக பணியாற்றியவர் ஜஸ்விர் குரானா (60). இவர் மனைவி திவ்யா (54). இவரும் மருத்துவர். இவர்கள் மகள் கிரண். ஜஸ்விர் குரானாவும் திவ்யாவும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை யில் பயிற்சி பெற்றவர்கள். கடந்த 20 வருடத்துக்கு முன் அமெரிக்கா சென்ற அவர்கள் அங்கு பணியாற்றி வந்தனர்.
மூவரும் இவர்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளாகி, கால்பந்து மைதானத்துக்கு அருகில் விழுந்தது. இதில் மூவருமே உயிரிழந்தனர். உடல்களை கைப்பற்றிய போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மறைந்த குரானாவுக்கு இன்னொரு மகள் இருக்கிறார் என்றும் அவர் விமானத்தில் செல்லாததால் உயிர் தப்பினார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.