அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: போட்டியிடும் இந்திய வம்சாவளி நபர்கள்! ஓர் அலசல்!

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் மீண்டும் ஓர் இந்திய வம்சாவளி நபர் இடம்பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியினர்
இந்திய வம்சாவளியினர்twitter

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போதிருந்தே அனைத்துக் கட்சிகளும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், வல்லரசான அமெரிக்காவிலும் ஜனாதிபதிக்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு அந்நாட்டில் இப்போதே ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

ட்ரம்ப், பைடன்
ட்ரம்ப், பைடன்கோப்புப் படம்

தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

இதற்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். குடியரசு கட்சி சார்பில் பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, கடந்தமுறை அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் உட்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். இப்பட்டியலில், குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிர்ஷ் வர்தன் சிங்கும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினர் போட்டி

ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே ஆகியோர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் மூன்றாவது இந்தியராக ஹிர்ஷ் வர்தன் சிங்கும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக ஹிர்ஷ் வர்தன் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’நியூ செர்ஜி குடியரசு கட்சியின் பழைமைவாதத்தை மீட்டெடுக்க பணியாற்றியவன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் திரும்பப் பெற்று அமெரிக்காவின் மதிப்புகளை மீட்டெடுக்க நமக்கு வலிமையான தலைமை தேவைப்படுகிறது. அதற்காகவே 2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் நான் போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரீஸ்
கமலா ஹாரீஸ்கோப்புப் படம்

தமிழகத்தைச் சேர்ந்த இருவர்!

இந்த நிலையில் ஆளும் ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு வயதாகிவிட்டதால் அவருக்குப் பதிலாக, தற்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இவர் போட்டியிட்டால், அவருக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது. எனவே கமலா ஹாரிஸ்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, இவர் போட்டியிட்டால் இவரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பட்டியலில் இடம்பிடிப்பார். கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழகம். அதுபோல் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் விவேக் ராமசாமியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளி வேட்பாளர், நிக்கி ஹாலே. இவர், பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்டவர்.

கமலா ஹாரீஸ் - விவேக் ராமசாமி இடையே போட்டி?

இந்தச் சூழலில் குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்து உள்ளனர். டொனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுபோல் ஜோ பைடனுக்குப் பதிலாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவு கிட்டும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவெக் ராமசாமி
விவெக் ராமசாமிட்விட்டர்

இதன் காரணமாக, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா, இந்தியாவைப்போல ஒரு ஜனநாயக நாடு என்றாலும், நமக்கும் அவர்களுக்குமான தேர்தல் முறைகள் முற்றிலும் மாறுப்பட்டவை. அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் அதிபர் தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும். அதாவது, அமெரிக்காவில் பிரதான கட்சிகள் என்றால், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஆக, அதிபர் வேட்பாளரைத் தேர்தெடுக்க இந்தக் கட்சிகள், தங்களுக்குள் ஒரு தேர்தலை நடத்தும். அதில் யாருக்கு ஆதரவு கிடைக்கிறதோ, அவர்தான் அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவியாக, அமெரிக்க அதிபர் பதவி கருதப்படுகிறது. அமெரிக்க அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com