ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்... அகாங்ஷா அரோரா யார்?
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தேர்தலில் அகாங்ஷா அரோரா என்னும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் களமிறங்கியுள்ளார். அவர் யார் என்பதை சற்றே விரிவாக பார்க்கலாம்.
தற்போது ஐ.நா-வின் பொதுச் செயலாளராக இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸ் மீண்டும் இதே பதவிக்கு போட்டியிட இருக்கிறார். இந்த முறை இவரை எதிர்த்து போட்டியிடுபவர்களில் கவனம் ஈர்க்கக் கூடியவராக அமைந்திருப்பவர், அகாங்ஷா அரோரா என்பவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்தான் இந்த அகங்ஷா அரோரா. இவருக்கு தற்போது 34 வயது. இவர் தன்னை விட ஒரு மடங்கு வயது அதிகம் இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸை எதிர்த்து போட்டியிடுவது பேசுபொருளாகி இருக்கிறது.
தற்போது ஐ.நா-வின் பொதுச் செயலாளராக இருக்கும் அன்டோனியோ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன் அகதிகள் மறுவாழ்வு துறையில் முதன்மை ஆணையராக இருந்த அனுபவம் கொண்டவர். ஆனால், அகாங்ஷா அரோராவுக்கோ, இதுவரை எந்த அரசியல் அனுபவமும் கிடையாது. அவருக்கு இருக்கும் ஒரே அனுபவம், ஐ.நா-வில் ஆடிட்டராக கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருவதுதான்.
யார் இந்த அகாங்ஷா அரோரா?
இந்தியாவின் ஹரியானா மாநிலம்தான் அரோராவுக்கு பூர்விகம். அரோராவின் தாய் வெளிநாடுகளில் வேலை செய்து வந்ததன் காரணாமாக அரோரா 6 வயதில் தன் தாயுடன் சவுதி சென்றார். ஆனால், அதன்பின் இந்தியா திரும்பி பள்ளிப் படிப்பை இங்கு முடித்த அரோராவுக்கு, பட்டப்படிப்புக்காக மீண்டும் வெளிநாடுகள் செல்ல நேர்ந்தது. இந்த முறை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, அங்கிருந்த கனடாவில் வேலை சேர்ந்தார். இறுதியாக 2016-ம் முதல் ஐ.நா-வில் பணிபுரிகிறார்.
கல்விக்காக, பணி நிமித்தமாக பல நாடுகளில் வாழ்ந்த அரோரா தன்னையும் ஓர் அகதியாகவே நினைக்கிறார். இதனாலேயே, அகதிகளுக்கான சேவையை ஐ.நா அமைப்பு சரிவர செய்யவில்லை எனக் குற்றம்சாட்டி ஐ.நா தேர்தல் களத்தில் இறங்கியுள்ளவர், ஐ.நா-வின் செயல்பாடுகள் மோசமானதாக இருப்பதாக விமர்சிக்கவும் தயங்கவில்லை. இவரின் முதன்மையான குற்றச்சாட்டே, வருமானம் தொடர்பாகத்தான். ஐ,நா-வின் வருமானம் 56 பில்லியன் டாலர்கள் எனில், ஒரு டாலரில் 29 சென்ட் மட்டுமே சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறது என்கிறார்.
குற்றச்சாட்டுகளை அடுக்கியபடி பிரசாரம் மேற்கொண்டு வரும் அரோரா, தான் வெற்றிபெரும் பட்சத்தில் அகதிகளின் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன் என வாக்குறுதி அளிக்கிறார். ஒருவேளை இவர் வெற்றிபெற்றால் ஐ.நா-வை வழிநடத்தும் இளம் பொதுச் செயலாளர் என்ற பெருமை மட்டுமில்லை, முதல் பெண் ஐ.நா பொதுச் செயலாளர் என்ற பெருமையும் அரோராவை வந்து சேரும்.
சில நாள்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய அரோராவுக்கு கால்களில் கடுமையாக காயம் ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒருவேளை உயிரிழந்திருந்தால் வாழ்க்கை ஏதும் அற்றதாய் இருந்திருக்கும் என்பதால் இந்த உலகில் தான் வாழ்ந்ததற்காக உலகில் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததாகக் கூறும் அரோரா, தேர்தலில் தோல்வியுற்றால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு அளித்த பதில் என்ன தெரியுமா?
``அகதிகளுக்கு எப்போதும் இரண்டாவது பிளான் இருப்பதில்லை. அதேபோல்தான், எனக்கும் இரண்டாவது பிளான் என்று எதுவும் கிடையாது" எனத் தன்னம்பிக்கை வரிகளை உதிர்க்கிறார்.
ஐ.நா நிலவரம் என்ன?
ஐ.நா-வில் ஆடிட்டராக வேலை பார்க்கும் அரோராவுக்கு உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தாலும், அதிகாரபூர்வமாக எந்த நாடும் வெளிப்படையாக அரோராவை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆதரவளிக்கபோவதாகவும் இல்லை. அன்டோனியோவுக்கே வெற்றி அதிகம் என்று மற்ற கணிப்புகள் சொன்னாலும், மனம் தளராமல், கடந்த ஓர் ஆண்டாக அரோரா தேர்தலுக்காக 30,000 டாலர்கள் வரை செலவு செய்து சமூக வலைதளத்திலும் இணையத்திலும் தன்னம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறார். அரோரா அகாங்ஷா ஐ.நா பொதுச் செயலாளர் ஆவாரா என்பதை அறிந்துகொள்ள அக்டோபர் வரை காத்திருக்க வேண்டி இருக்கும்.