ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட சரக்கு கப்பலை தக்க தருணத்தில் காப்பாற்றிய இந்திய கடற்படையினர்

இந்திய (ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ) கடற்படைக் கப்பலானது, கடற்கொள்ளையர்களை தடுக்கும் பணிக்காக ரோந்தில் ஈடுபட்டிருந்தது.
தாக்குதலுக்குள்ளான சரக்கு கப்பல்
தாக்குதலுக்குள்ளான சரக்கு கப்பல்PT

ஏடன் வளைகுடா பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலை, இந்திய கடற்படையினரின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்,   மீட்டு உதவிசெய்துள்ளது

இஸ்ரேல், ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் செங்கடலில் வணிகக்கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மார்ஷல் தீவு கொடியை கொண்ட MV Genco Picardy என்ற வணிக கப்பல் ஒன்று ஏடன் பகுதியில் பயணப்பட்ட சமயத்தில் நேற்று இரவு (இந்திய நேரப்படி) 23:11 மணியளவில் ஆளில்லா விமானத்தால் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த தாக்குதலில் சரக்கு கப்பலானது தீப்பிடித்து எரிந்துள்ளது. அச்சமயத்தில் இந்திய (ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ) கடற்படைக் கப்பலானது, கடற்கொள்ளையர்களை தடுக்கும் பணிக்காக அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தது.

ஆளில்லா விமானத்தால் தாக்குதலுக்கு உள்ளான MV Genco Picardy வணிகக் கப்பல், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ்-ஐ தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளது.

MV Genco Picardy-யின் உதவி அழைப்பை ஏற்ற ஐஎன்எஸ் இந்தியக் கப்பல் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பழுதடைந்த கப்பலுக்கு உதவி செய்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்தக் கப்பலில் 9 இந்தியர்கள் உள்பட் 22 பணியாளர்கள் இருந்தனர் என்றும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

மேலும் இக்கப்பலில் சேதமடைந்த பகுதியை இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். முழுமையான ஆய்வுக்கு பிறகு கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்து பின் அதன் பயணத்தை தொடர உதவி செய்துள்ளனர்.

கடந்தமாதம் மட்டும் தாக்குதலுக்குள்ளான கப்பல்களின் விவரம்

1.கடந்த டிசம்பர் 23 அன்று, 21 இந்திய பணியாளர்களுடன் லைபீரியக் கொடியுடன் எம்வி கெம் புளூட்டோ கப்பல் ஒன்று இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானது.

2. MV கெம் புளூட்டோ தவிர, இந்தியாவுக்குச் செல்லும் மற்றொரு வணிகக் எண்ணெய் டேங்கர் அதே நாளில் தெற்கு செங்கடல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தக் கப்பலில் 25 இந்திய பணியாளர்கள் இருந்தனர்.

3.அதேபோல் மற்றொரு சம்பவமான MV Ruen என்ற மால்டா நாட்டுக் கப்பல் டிசம்பர் 14 அன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com