”வேறு வழியில்லாததால் இந்த முடிவு..” - தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீஸின் விளக்கம்!

”வேறு வழியில்லாததால் இந்த முடிவு..” - தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீஸின் விளக்கம்!
”வேறு வழியில்லாததால் இந்த முடிவு..” - தமிழரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலிய போலீஸின் விளக்கம்!

சிட்னியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் சிட்னி மேற்குப்பகுதியில் உள்ள அபர்ன் ரயில் நிலையத்தில் நேற்று (பிப்.,28) மதியம் 12.30 மணிக்கு திடீரென்று பதற்றம் ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் தூய்மை பணி செய்து கொண்டிருந்த நபரை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் தூய்மை பணியாளர் ரத்தக் காயமடைந்த நிலையில் உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த போலீசார் கத்தியால் குத்திய நபரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் காவலர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கத்தியால் குத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 2 போலீசார் அந்த நபரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் அந்த நபரின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த நபர் இறந்துவிட்டார். 

இதையடுத்து இறந்த நபர் யார் என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் பெயர் முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பதும், அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் பிரிட்ஜிங் விசாவில் (Bridging Visa) ஆஸ்திரேலியாவில் இருந்த நிலையில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

இதுபற்றி நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் கூறுகையில், ‛‛துப்பாக்கிச்சூடு நடத்துவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் போலீஸ் இந்த முடிவை எடுத்தது. இருப்பினும்  அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது தாக்குதலில் காயமடைந்த தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று சிட்னியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com