அமெரிக்காவில் அதிகரிக்கும் கெடுபிடி.. வீட்டுக்குள்ளேயே முடங்கும் இந்தியர்கள்!
அமெரிக்காவில் அதிகரிக்கும் குடியேற்றக் கொள்கை நடவடிக்கைகளால், இந்தியர்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புவின் 2.0 நடவடிக்கைகள், உலகளவில் நாள்தோறும் பேசுபொருளாகி வருகிறது. இதனால் அமெரிக்கக் கனவு என்பது எல்லா நாடுகளிலும் பலருக்கும் எட்டாத தூரத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதிலும், இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த நிலையில், மேலும் அடுத்த இடியாக இந்தியர்கள் அமெரிக்காவுக்குள்ளேயே முடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா கட்டுப்பாடுகள் மற்றும் ஆய்வுகளுக்கு மத்தியில், இந்தியர்கள் உட்பட அமெரிக்காவிற்குள்கூட பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். அமெரிக்காவிற்குள் மீண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக, புலம்பெயர்ந்தோகூட வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்த்து வருவதாக KFF மற்றும் NYT கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் இருக்க, அதிகமான குடியுரிமை பெற்ற குடிமக்கள்கூட இப்போது வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்ப்பதாகக் கண்டறிந்துள்ளது.
தேவையான ஆவணங்கள் இருந்தபோதிலும் அவர்கள் பயணத்தை முற்றிலுமாகத் தவிர்ப்பதாக இந்திய-அமெரிக்கர்களை மையமாகக் கொண்ட ஓர் ஊடகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. நியூயார்க் டைம்ஸுடன் இணைந்து கைசர் குடும்ப அறக்கட்டளை (KFF) நடத்திய 2025 குடியேற்றவாசிகள் கணக்கெடுப்பில், அனைத்து அமெரிக்க குடியேறிகளில் 27% அல்லது 10 பேரில் மூன்று பேர், குடியேற்ற அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதைத் தவிர்ப்பதற்காக நாட்டிற்குள் அல்லது வெளியே பயணம் செய்வதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்.
செல்லுபடியாகும் H-1B விசாக்கள் மற்றும் குடியுரிமை பெற்ற குடிமக்கள் உட்பட சட்டப்பூர்வமாக இருக்கும் குடியேறிகள்கூட பயணத்தைத் தவிர்ப்பது அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதேநேரத்தில், ஆவணமற்ற குடியேறிகளிடையே இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அல்லது 63% பேர் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களைத் தவிர்த்துவிட்டதாக கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது. டிசம்பர் வரை உள்நாட்டு விமானப் பயணங்களில் தலையிடுவதை குடியேற்ற அதிகாரிகள் பெரும்பாலும் தவிர்த்து வந்த நிலையில், அவர்கள் அதைத் தீவிரமாக ஆய்வு செய்வது இதுவே முதல் முறையாகும்.

