பாலியல் வன்கொடுமை... பாகிஸ்தானி மீது இந்தியப் பெண் புகார்
இந்திய பெண் ஒருவர் இஸ்லாமாபாதில் உள்ள தூதரகத்தில், தன்னை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு முறையிட்டுள்ளார். பாகிஸ்தானை சார்ந்த ஒரு நபர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
20 வயதாகும் உஸ்மா, டெல்லியை சார்ந்த சாகர் அகமதின் மகள். இவர் கடந்த வருடம் மலேசியா சென்ற போது அங்கு தாஹிர் அலி என்ற பாகிஸ்தானியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் இந்தியா திரும்பியதும், தாஹிர் அலியை சந்திக்க மே 1-ம் தேதி வாகா எல்லையை கடந்து பாகிஸ்தான் சென்றார். இவர்களின் எல்லை தாண்டிய காதல் கதையை பாக்கிஸ்தான் ஊடகங்கள் ஒளிப்பரப்பின.
இந்நிலையில் உஸ்மா, தாஹிர் அலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மலேசியாவில் பழக்கமான தாஹிர் அலி தன்னை ஸ்பான்சர்ஷிப் கொடுத்து பாகிஸ்தான் வரச் சொன்னதாகவும், பாகிஸ்தான் வந்ததும் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் உஸ்மா கூறியுள்ளார். தாஹிர் அலி திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தான் திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை நாடிய உஸ்மா, தாஹிருடன் தன்னை அவரது கிராமத்திற்கு அனுப்பினால் தான் பிணமாக திரும்பி வர நேரிடும் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி, தன்னை இந்தியாவுக்கு அனுப்பி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
உஸ்மாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள தாஹிர், உஸ்மா தன்னை விரும்பித் திருமணம் செய்து கொண்டதாவும், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது உஸ்மாவிற்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.