பாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை
காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், இந்திய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பாலிவுட் திரைப்படங்கள் மீது பாகிஸ்தான் நாட்டு மக்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பர். இதனால் இந்தியாவுடன் எப்போது பிரச்னை வந்தாலும் பாகிஸ்தானில் பாலிவுட் திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்படும். ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் போன்ற நடிகர்களுக்கு பாகிஸ்தானிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சுமார் 40 ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்களை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 2005ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப் நீக்கினார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.