அமெரிக்காவில் இந்திய டாக்டர் கத்தியால் குத்திக் கொலை: நோயாளி வெறிச்செயல்
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மருத்துவர் அச்சுதா தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். கன்சாஸில் உள்ள கிழக்கு விசிடா பகுதியில் உளவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சொந்தமான கிளினிக் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். அச்சுதா கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவரது கிளினிக்கில் கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அச்சுதாவின் நோயாளிகளில் ஒருவரும் அமெரிக்க வாழ் இந்திய இளைஞருமான உமர் ரஷித் தத் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். நோயாளிக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாகவும், முடிவில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் அமெரிக்க போலீசார் தெரிவித்தனர்.
உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவராக அச்சுதா 1989 ஆம் ஆண்டு முதல் கன்சாஸில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். உளவியல் மட்டுமல்லாமல் யோகா மூலமும் சிகிச்சை அளித்து வந்தார். அச்சுதாவின் மனைவியும் ஒரு மருத்துவர் தான். இந்தியாவை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். முன்னதாக தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குசிபோட்லா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டார்.