“கொஞ்சம்தான் காய்கறிகள் இருக்கிறது.. விரைவில் வாருங்கள்” - சீனாவில் சிக்கிய இந்திய தம்பதி

“கொஞ்சம்தான் காய்கறிகள் இருக்கிறது.. விரைவில் வாருங்கள்” - சீனாவில் சிக்கிய இந்திய தம்பதி
“கொஞ்சம்தான் காய்கறிகள் இருக்கிறது.. விரைவில் வாருங்கள்” - சீனாவில் சிக்கிய இந்திய தம்பதி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1900 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் உள்ள விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், சீனாவில் உள்ள பிற நாட்டு மக்களும் விமானங்கள் மூலமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த 650 பேர் சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா வந்தடைந்தனர். இந்நிலையில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்கள் கடந்த சனிக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டனர். வீடியோவில் உள்ள ஆஷிஷ் யாதவ் வுகான் டெக்ஸ்டைல் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி நேகா யாதவ் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

அவர்கள் வீடியோவில் கூறியதாவது, “நாங்கள் பல்கலைக் கழகத்தின் குடியிருப்பில் வசித்து வருகிறோம். இதற்கு முன்னர் இங்கு பல்கலைக் கழக மாணவர்கள் இருந்து வந்தனர். ஆனால் தற்போது இங்கு யாரும் இல்லை. இப்போது எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும் தண்ணீர் கேன்கள் மட்டுமே உள்ளன” என்று கூறியிருந்தனர்.

இதனையடுத்து, இந்தத் தம்பதி ஞாயிற்றுக்கிழமை மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், “வானிலை மிக மோசமாக உள்ளது. நேற்றிலிருந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததற்கு பின்னர் எங்களுக்குத் தேவையான காய்கறிகளையும், தண்ணீரையும் அனுப்பி வைத்தனர். ஆனால், இவையும் விரைவில் தீர்ந்து விடும். ஆகவே எங்களை இந்திய அரசு விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து சீனாவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டது. அதில் சீனாவுக்கு உணவுப்பொருட்களை வழங்க இந்திய விமானம் ஒன்று சீனாவுக்கு வர இருக்கிறது. அந்த விமானத்தில் சீனாவில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்தியர்கள் அதில் வரலாம் என்று குறிப்பிட்டு அவர்களை தொடர்பு கொள்வதற்கான எண்களையும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com