”என் மகனை டைவர்ஸ் செய்வதால்..” - மருமகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க வாழ் இந்தியர்!

”என் மகனை டைவர்ஸ் செய்வதால்..” - மருமகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க வாழ் இந்தியர்!
”என் மகனை டைவர்ஸ் செய்வதால்..” - மருமகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க வாழ் இந்தியர்!

74 வயது இந்திய - அமெரிக்க வாழ் நபரொருவர், தனது மருமகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனது மகனை, மருமகள் விவாகரத்து செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அந்த கோபத்தில் அவர் இதை செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சிதல் சிங் என்பவர், தனது மருமகளான குர்ப்ரீத் கௌர் என்பவரை அவர் பணி செய்யும் இடத்திலுள்ள பார்க்கிங்கில் வைத்து, கடந்த வாரம் கொலை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, குர்ப்ரீத் அவருடைய காரில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், தன் மாமனாரால் தன் உயிருக்கு ஆபத்திருப்பதாக குர்ப்ரீத் தன் நண்பர்கள், உறவினர்களிடம் கூறியுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தனது உறவினர் ஒருவரிடம், தன் மாமனார் தன்னை பார்க்க சுமார் 150 கிலோமீட்டர் பயணித்து வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் குர்ப்ரீத்.

குர்ப்ரீத்தின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரிடம் தொலைபேசியில் பேசிய அந்த உறவினர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், “குர்ப்ரீத் தனது அலுவலகத்தில் கிடைத்த இடைவேளியின்போது, சிதல் தனது கார்-ஐ நெருங்குவதை பார்த்திருக்கிறார். இதனால் அவர் ரொம்பவும் பயந்துபோயிருந்தார்” என்றுள்ளார். இவருடனான ஃபோன் காலுக்கு பின் (சுமார் 5 மணி நேரத்துக்கு பின்), அந்த பார்க்கிங்கில் குர்ப்ரீத்தின் உடல் சடலமாக அவரது காரில் மீட்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2 தோட்டக்களாவது அவரது உடலை துளைத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

குர்ப்ரீத், சிதிலின் மகனை விவாகரத்து செய்யும் முடிவிலிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல அடுத்தடுத்த கட்ட விசாரணையில் சிதிலை சுற்றியே அனைத்து சாட்சியங்களும் இருந்ததால், முதற்கட்டமாக போலீஸார் சிதிலை தேடி வந்துள்ளனர். குர்ப்ரீத்திடம் கடைசியாக பேசிய உறவினரின் உதவியோடு காவல்துறையினர் சிதிலை கையும் களவுமாக கைதும் செய்துள்ளனர். அவரிடமிருந்து .22-காலிபர் பெரெட்டா பிஸ்டல் (.22-caliber Beretta pistol) கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிதல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிதல் ஒருவார்த்தைகூட பேசாமல் இருந்திருக்கிறார் என ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் நவ.14ல் சிதல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com