பன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரான இந்தியப் பெண்!
பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எப்) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கர்நாடக மாவட்டத்தின் மைசூரில் பிறந்தவர். இவர் ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டு நிதியத்தின் 11ஆவது தலைமைப் பொருளாதார நிபுணராகப் பொறுப்பேற்றுள்ளார். 47 வயதான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியாகப் பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற கீதா, வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றவர். தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தவர்.
2001-ம் ஆண்டு சிகாகோ பல்கலையில் துணை பேராசிரியராகச் சேர்ந்து, அதன்பின், 2005-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்கு மாறினார். தற்போது பன்னாட்டுப் பண நிதியத்தின் 11ஆவது தலைமைப் பொருளாதார நிபுணராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கீதாவுக்கு முன்பு மாரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் என்பவர் பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார ஆலோசகராகவும் ஆராய்ச்சித்துறையின் இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். அவரின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் 31-உடன் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி கீதா கோபிநாத் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஐஎம்எப்பின் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பொறுப்பேற்றுள்ள முதல் பெண் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதம் கீதாவின் நியமனம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டைன் லெகார்டே, கீதா கோபிநாத் சர்வதேசஅளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர். பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர். அவரை தலைமைப்பொருளாதார வல்லுநராக நியமிப்பதில் பெருமை கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.