“மனித உரிமைகளை காப்பதில் இந்தியாவின் உறுதி உலகறிந்தது”-ஐநா இந்திய பிரதிநிதி பேட்டி
ஐநா பாதுகாப்பு சபைக் கூட்டம் முடிந்ததும், ஐநா தலைவர் சார்பில் இருந்து அறிக்கை வெளியாகாத நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் செய்தியாளர்கள் முன் அறிக்கை வாசித்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்ளாமல் அவசரமாக வெளியேறினர். இது வழக்கமானதல்ல என்று ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பர்தீன் விளக்கினார்.
இதுதொடர்பாக பேசிய சையத் அக்பர்தீன், “ ஐநா பாதுகாப்பு சபைக் கூட்டம் முடிந்ததும் இரண்டு நாடுகள் தங்கள் தேசிய அறிக்கையை ஊடகங்களிடம் வெளியிட்டது இதுதான் முதல்முறை. தங்கள் அறிக்கை மூலம் சர்வதேச நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அதைச் செய்திருக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் நன்றாகத் தெரியும், நான் விளக்கத் தேவையில்லை.
ஐநா பாதுகாப்பு சபை விரிவான மற்றும் கவனத்தில் கொள்ளத்தக்க அமைப்பு. அதன் கூட்டத்தின் முடிவுகள் ஐநா தலைவர் வாயிலாகவே வெளிவரும். நாடுகளின் தனித்தனி அறிக்கைகள் வெளியிட்டதன் மூலம் ஐநாவின் பெருமையைக் குலைத்து, சர்வதேச கவனத்தை ஈர்த்து விட முயற்சி நடந்திருக்கிறது. அதை இந்தியா சார்பில், இந்தியாவின் நிலையை விளக்கவே உங்களைச் சந்திக்கிறேன்.
சிலர் ஜம்மு காஷ்மீரின் களநிலவரத்தில் இருந்து மாறுபட்டு, எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஒரு நாடு ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் இந்தியா மீது ஏவிக் கொண்டிருக்கிறது. அதன் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அதை சொல்லியலாகப் பயன்படுத்தி இந்தியாவில் வன்முறையை தூண்டுகின்றனர். வன்முறை மூலம் நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது.
சர்வதேச அளவிலான எந்த அமைப்பும் இந்தியாவுக்கு எதிர்மறை கருத்து தெரிவித்ததில்லை. இந்திய ஜனநாயகம் பற்றி இதுவரை எந்த அமைப்பும் எதுவும் சொன்னதில்லை. மனித உரிமைகளைக் காப்பதில் இந்தியாவின் உறுதி உலகறிந்தது. ஐநாவில் மனித உரிமைக்கென தனித் தொகுப்பை ஏற்படுத்தச் செய்தது இந்தியாதான். அதுவரை யாரும் அதுபற்றி பேசவும் இல்லை, கவலைப்படவும் இல்லை” என தெரிவித்தார்.