உலக வங்கியில் கடன்.. பாகிஸ்தானை முந்திய இந்தியா? தரவுகள் சொல்வது என்ன?
தன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சில நாடுகள், உலக வங்கியிடம் (World Bank) கடன் வாங்குகின்றன. அந்த வகையில், நமது இந்தியாவும் வாங்கியுள்ளது. அதேநேரத்தில், அண்டை நாடான பாகிஸ்தானைவிட இந்தியாவின் கடன் அதிகமிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டின் நிலவரப்படி, உலக வங்கியிடம் இந்தியாவின் நிலுவைக் கடன் தொகை சுமார் டாலர் 34.35 பில்லியன் ஆகவும், பாகிஸ்தானின் கடன் தொகை சுமார் டாலர் 20.2 பில்லியன் ஆகவும் உள்ளது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, பாகிஸ்தானைவிட இந்தியாவின் நிலுவைக் கடன் தொகை என்பது அதிகம்தான்.
ஆனால், பொருளாதார அளவில் பார்க்கும்போது.. அதாவது, இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரியது. அந்த வகையில், நாட்டின் மொத்த உற்பத்தியுடன் (GDP)ஒப்பிடும்போது, இந்தியாவின் கடன் சுமை என்பது (0.8%) பாகிஸ்தானைவிட (5.0%) மிகக் மிகக் குறைவு. இதுகுறித்து இன்னும் விவரமாகச் சொல்ல வேண்டுமெனில், வெறும் கடன் தொகையை மட்டும் பார்க்காமல், ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியானதாகும்.
மேலும், இந்தியா 2014-க்குப் பின் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி சலுகைக் கடன்களைப் (IDA) பெறாமல், நடுத்தர வருவாய் நாடுகளுக்கான IBRD வழியிலான சந்தை வட்டி கடன்களையே பெறுகிறது. ஆனால், பாகிஸ்தானோ இன்றும் IDA சலுகைக் கடன்களையே சார்ந்துள்ளது. தவிர, இந்தியாவின் உலக வங்கி நிலுவைக் கடன் 2020-இல் இருந்த டாலர் 39.6 பில்லியனில் இருந்து 2026-இல் டாலர் 34.35 பில்லியனாகச் சுமார் 13% குறைந்துள்ளது. மேலும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் டாலர் 650 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
இதனால் வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி மற்றும் அசலைச் செலுத்துவதில் இந்தியாவிற்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஆனால் பாகிஸ்தானின் கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதால், கடனைத் திரும்பச் செலுத்த மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், பெரிய பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் கடனின் அளவு அதிகமாகத் தெரிகிறதே தவிர, நிதியியல் ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மேலாண்மையில் இந்தியா பாகிஸ்தானைவிட மிகவும் வலுவான நிலையிலேயே உள்ளது.

