உறவில் எழுந்த விரிசல் |வங்கதேசத்திற்கு புதிய 'செக்' வைத்த இந்தியா!
வங்கதேச பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய புதிய நடவடிக்கை ஒன்றை இந்தியா எடுத்துள்ளது. இந்தியா வழியாக பொருட்களை ஏற்றுமதி செய்ய வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சலுகை நிறுத்தப்படுவதாகவும் தற்போது இந்திய விமான நிலையங்கள், துறைமுகங்களில் உள்ள பொருட்கள் மட்டும் வெளியேற அனுமதிக்கப்படும் என்றும், புதிதாக இனி அனுமதிக்கப்படாது என்றும் மத்திய மறைமுக மற்றும் சுங்கவரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசின் இம்முடிவால் இந்திய ஆடை, காலணி, நகை தொழில் நிறுவனங்கள் ஆதாயம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துடன் அரசியல் ரீதியாக உரசல்கள் இருந்து வரும் நிலையில், மத்திய அரசின் இம்முடிவு முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 37% பதில் வரி விதித்துள்ளதும் வங்கதேச பொருளாதாரத்தை பாதிக்கும் என கருதப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு பதில் வரி விதிப்பை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க அமெரிக்காவை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது.