உக்ரைன் -ரஷ்யா இடையில் போர் பதற்றம்: மாணவர்கள், இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

உக்ரைன் -ரஷ்யா இடையில் போர் பதற்றம்: மாணவர்கள், இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உக்ரைன் -ரஷ்யா இடையில் போர் பதற்றம்:  மாணவர்கள், இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் உடனே நாடு திரும்பும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நேட்டோ (NATO - North Atlantic Treaty Organization) நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனெனில், மொழி, கலாச்சார விவகாரத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது.

ஆனால், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். மேலும், உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதனால் இரு நாடுகளும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த மோதலால், உக்ரைன் எல்லையில், ரஷியா சுமாா் 1 லட்சத்து 30 ஆயிரம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷ்யா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷ்யா மறுத்து வருகிறது. உக்ரைனில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே நாடு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, நார்வே, பல்கேரியா, ஸ்லோவேனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எஸ்டோனியா, லூதியானா, லக்ஸம்போர்க், கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு விமான நிறுவனங்களும், உக்ரைனுக்கு விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. உச்சக்கட்ட போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மத்திய அரசும், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து நாடு திரும்புமாறு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக, உக்ரைனில் உள்ள மாணவர்கள் நாடு திரும்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், அத்தியாவசிய தேவையின்றி உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், தங்கள் நிலை மற்றும் இருப்பிடங்களை உக்ரைன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், ஊழியர்கள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் போர் பதற்றம், இந்திய பங்கு சந்தைகளிலும் பங்குகள் வீழ்ச்சியடைந்து எதிரொலித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com