மதச் சுதந்திரம் குறித்து புகார்.. அமெரிக்க அரசு அமைப்புக்கு இந்தியா பதிலடி!
சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யுஎஸ்சிஐஆா்எஃப்) ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச அளவில் மதச் சுதந்திர மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடும். அந்த வகையில் நடப்பாண்டிலும் இந்தியாவில் மதச் சுதந்திரம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில், “இந்தியாவில் மதச் சுதந்திரம் தொடா்ந்து மோசமடைந்து வருகிறது. மதரீதியிலான சிறுபான்மையினா் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடா்கிறது. சா்வதேச மதச் சுதந்திர சட்டத்தின்கீழ், மதச் சுதந்திர மீறல்களுக்காக இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிப்பதுடன், இத்தகைய மீறல்களின் ஈடுபடும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையையும் அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-ஆம் ஆண்டு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது மீண்டும் ஒருசார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை. இந்தியாவின் துடிப்பான பன்முக கலாசார சமூகத்தின்மீது அவதூறுகளைச் சுமத்தும் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியவை. அந்த அறிக்கையில் மதச் சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையைவிட , திட்டமிட்ட உள்நோக்கமே அதில் வெளிப்படையாக தெரிகிறது. ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையைக் குறைகூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது. உண்மையில் அந்த அமைப்புதான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.