லடாக்கில் உள்ள பகுதிகளில் 2 புதிய மாவட்டங்களை அறிவித்த சீனா.. கண்டனம் தெரிவித்த இந்தியா!
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமைகோரி வருகிறது. கடந்த 2021இல் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு, சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வரைபடத்தில், ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இந்தியப் பகுதிகளை ’அக்ஷயா சின்’ எனக் குறிப்பிட்டிருந்தது.
அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, 'தெற்கு திபெத்’ எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியிருந்தது பேசுபொருளானது.
தவிர, இந்திய எல்லைப் பகுதிகளில் சுரங்கங்கள், ஹெலிபேடுகள், பாலங்கள் மற்றும் பதுங்குக் குழிகளை அதிகளவில் உருவாக்கியது. மேலும், இந்திய எல்லையையொட்டி தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 11 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடமேற்கில் அக்சாய் சின் (Aksai Chin) என்ற நிலப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்திய அரசால் உரிமை கோரப்படும் இந்தப் பகுதி, தற்போது சீனா ஆக்கிரமித்துள்ளது. மேலும் இதன் வழியாக சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் சாலையை சீன அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில் இப்பகுதியை He'an County மற்றும் Hekang County என சீன அரசு குறிப்பிட்டு, இரண்டு புதிய மாவட்டங்களாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களும் சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த அறிவிப்புக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்திய பகுதியை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீனா அறிவித்துள்ள 2 புதிய மாவட்டங்கள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் வருகின்றன.
புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட பகுதியின் மீதான இந்தியாவின் இறையாண்மை தொடர்பான நீண்டகால நிலைப்பாட்டை மாற்ற முடியாது. இந்தச் செயல் சீனாவின் சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது. நாங்கள் தூதரக வழிகள் மூலம் சீன தரப்பிற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.