அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்கும் திட்டம் நிறுத்திவைப்பு.. பதிலடியாக இந்தியா நடவடிக்கை!
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால், இந்தியாவின் ஏற்றுமதி மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், ட்ரம்பின் வரி விதிப்புக்குப் பதிலடியாக, இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து ஸ்ட்ரைக்கர் போர் வாகனங்கள், ஜாவலின் ஏவுகணைகள், மற்றும் ஆறு போயிங் P8I ரக உளவு விமானங்களை வாங்க திட்டமிட்டிருந்தது. இதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் அமெரிக்கா செல்லவிருந்தார். ஆனால், தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தில் தெளிவு ஏற்பட்ட பிறகே, அமெரிக்காவிடமிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடரும் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2008 இல் அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆயுத சப்ளையராக உருவெடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு வர்த்தகம் 1 பில்லியன் டாலரில் இருந்து 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான ஆயுத வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.