கரடுமுரடான உறவுகளுடன் பயணிக்கும் இந்தியாவும், மியான்மரும்
அண்டை நாடாக இருந்தாலும் மியான்மருடன் வரலாறு நெடுகிலும் இந்தியா கரடுமுரடான உறவுகளையே கொண்டிருக்கிறது.
1937-ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமாக இருந்த பகுதி தற்போது மியான்மராக அறியப்படும் பர்மா. விடுதலையடைந்து பிறகு தனித்தனி நாடுகளாக இருந்த மியான்மரும் இந்தியாவும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. பண்பாட்டு, வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்ததால் இந்த உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வந்திருக்கிறது. நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே மியான்மரில் கணிசமாக இந்தியர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். ஆயினும் 1930-களில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போதும், 1960-களில் வன்முறைகள் காரணமாகவும் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதனால் மியான்மரில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்திருக்கிறது. தற்போது மியான்மரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 2 சதவிகிதமாகும்.
பல்வேறு சிக்கலான காரணங்களுக்காக மியான்மர் தேசியவாதிகள், இந்தியர்களை எதிரிகளாகவே பார்க்கிறார்கள். பொதுவாக குடிமைப் பணிகளிலும், ராணுவத்திலும் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அரசு ரீதியாக இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையேயான உறவு மேடுபள்ளங்கள் நிறைந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஜனநாயகத்துக்கு ஆதவான போராட்டங்களை இந்தியா ஆதரித்து வந்தது. அதனால் மியான்மர் ஆட்சியாளர்கள் சீனாவின் பக்கம் சாய்ந்தார்கள். 1987-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி, மியான்மருக்குப் பயணம் மேற்கொண்டபோது, இந்த உறவு சற்று மேம்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே அரசுக்கு எதிரான போராட்டங்களை மியான்மர் அரசு ஒடுக்கியதால் உறவில் விரிசல் ஏற்பட்டது.
மியான்மரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் இந்தியாவுக்கு வந்தது. அதன் பிறகு, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் என அடுத்தடுத்த இந்தியப் பிரதமர்கள், உறவை படிப்படியாக மேம்படுத்தினார்கள். மியான்மரின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு முக்கியச் சந்தையாக இருப்பது இந்தியா. தாய்லாந்து, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுடன் குறிப்பிடத்தகுந்த வர்த்தக உறவைக் கொண்டிருக்கிறது மியான்மர்.
சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில், மியான்மருக்கு பல்வேறு வகையிலும் இந்தியா உதவி செய்து வருகிறது. சித்வே கடற்படைத் தளத்தை மேம்படுத்தும் பணி இதில் குறிப்பிடத்தகுந்தது. 2007-ஆம் ஆண்டு மியான்மரின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிடப்போவதில்லை என அறிவித்தது முதல் மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு தார்மிக ஆதரவை வழங்கியது இந்தியா. ஆனால், சில ஆண்டுகளேயே ராணுவ ஆட்சி நீங்கி, ஆங்சான் சூச்சி தலைமையில் மக்களாட்சி மலர்ந்துவிட்டதால் உறவில் நெருக்கம் குறைந்திருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில் மியான்மரின் அரசியல் உறவுக்கு சீனா இந்தியா என இரு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சீனாவுடனான போட்டியில் முந்துவதற்கு மியான்மரை அரவணைத்துக் கொள்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறுவழியில்லை.