ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் - இந்தியா என்ன முடிவு எடுத்தது தெரியுமா?

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் - இந்தியா என்ன முடிவு எடுத்தது தெரியுமா?
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் - இந்தியா என்ன முடிவு எடுத்தது தெரியுமா?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை. மேலும், அந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலமாக ரஷ்யா நிராகரித்தது.

நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது முதலாக, அந்நாட்டின் மீது படையெடுக்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டணி நாடுகளும் குரல் கொடுத்து வந்த போதிலும், ரஷ்யா அதனை சட்டை செய்யவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை முதலாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பலமுனை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்களும், நூற்றுக்கணக்கான குடிமக்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற வலியுறுத்தியும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் தீர்மானத்தை முன்மொழிந்தன.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களித்தன. அதே சமயத்தில், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை ரஷ்யா நிராகரித்தது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரத் தூதர் டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், "உக்ரைன் விவகாரத்தில் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. எனவே பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் முன்வர வேண்டும். இந்த காரணங்களுக்காகவே, தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை" என்றார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் கூறியபோது, "உக்ரைனின் இறையாண்மையை சீர்குலைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. சர்வதேச சட்டத்தையும், ஐ.நா.வையும் ரஷ்யா அவமதிக்கிறது. இன்று தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை ரஷ்யா தோல்வி அடைய செய்யலாம். ஆனால், எங்களின் குரலை ரஷ்யாவால் நசுக்க முடியாது. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் தோல்வி அடைந்தாலும், ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை நாங்கள் கொண்டு வருவோம்" என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com